இது ஒரு சோறு பதம்தான். தமிழகத்தில் மதுவால் வீழ்ந்த குடும்பங்களைப் போல் ‘புகை(யிலை)யால் பொசுங்கிப் போன குடும்பங்களும்’ ஆயிரக்கணக்கில் இருக்கும். உடலில் ஒரே நேரத்தில் பல உறுப்புகளைப் பாதிக்கிற ஒரு வஸ்து இருக்கிறது என்றால், அது புகையிலைதான். இதில் நாலாயிரத்துக்கும் அதிகமான நச்சுக்கள் இருக்கின்றன. அவற்றின் தலைவனாக இருப்பது, நிகோடின்! இது எளிதில் ஒருவரை அடிமையாக்கி விடும் போதைப் பொருள். பீடி/சிகரெட்/சுருட்டுப் புகை, வெற்றிலை சீவல், மூக்குப் பொடி, பான் மசாலா என பல வேஷங்களில் இது உடலுக்குள் செல்கிறது.கொரோனரி ரத்தக் குழாயைச் சுருங்க வைத்து, ஹார்ட் அட்டாக்கைக் கொண்டுவரும் சக்தி இந்த நிகோடினுக்கு உண்டு. ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, கால் விரல்களை அழுக வைத்து, காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளுவதும் உண்டு. வாய், தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, கணையம், புராஸ்டேட், நுரையீரல் என்று பல இடங்களில் புற்றுநோயைப் பரிசாகக் கொடுக்கும்.
இதோடு விட்டதா? ‘சிஓபிடி’ (Chronic Obstructive Pulmonary Disease) என அழைக்கப்படும் ‘நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை’ வளர்ப்பதில் முதலிடம் வகிப்பதும் இதுதான். ஆண்டுதோறும் புற்றுநோயால் இறக்கும் ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நுரையீரல் புற்றுநோயால்தான் இறக்கிறார்கள். இதிலிருந்தே இதன் கோர முகம் உங்களுக்குப் புரிந்திருக்கும். தொடர்ச்சியான இருமல் இதன் பிரதான அறிகுறி. ஆரம்ப அறிகுறியும் இதுதான்.புகைப்பதால் ஏற்படும் வழக்கமான இருமலுக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. இதை நோயாளியே உணர முடியும். அப்போது சுதாரித்துக்கொண்டு, உடனே டாக்டரைப் பார்த்துவிட வேண்டும். இருமலில் சளி வரலாம். சளியில் ரத்தமும் வரலாம். முதன்முதலில் சளியில் சிவப்புக் கோடு போட்டதுபோல் ரத்தம் ஒட்டிக்கொண்டு வரும். பிறகு ரத்தம் மட்டும் தனியாகக் கொட்டும். இது ரொம்பவும் ஆபத்தானது. அடுத்து மூச்சுத்திணறல் ஆரம்பிக்கும். தொண்டைக்குள் எலும்பு சிக்கிக்கொண்ட மாதிரி அடைக்கும்.
நெஞ்சு வலிக்கும். சாப்பிட முடியாது. சோர்வு ரொம்பவே படுத்தும். உடல் மெலியும். இந்த நேரத்தில் புற்று செல்கள் நுரையீரலில் இருந்து கிளம்பி, கல்லீரல், எலும்பு, மூளை, சருமம் என பல இடங்களுக்குச் சென்று, அங்கும் குடித்தனம் நடத்தும். இதனால் உயிருக்கு ஆபத்து நேரும். மார்பை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் நுரையீரல் புற்றுநோய் இருப்பது புரிந்துவிடும். சமயங்களில் அது சீழ்க்கட்டியாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பும்.அப்போது சி.டி ஸ்கேன் உதவிக்கு வந்து நோயை உறுதி செய்யும். அடுத்த கட்டம் கேன்சரின் வகையைத் தீர்மானிப்பது. இதற்கு பிராங்காஸ்கோப்பி, நீடில் பயாப்சி என்று பல பரிசோதனைகள் இருக்கின்றன. வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தால், புற்று பரவியுள்ள இடங்கள் தெரியும். நோயின் வகை, தன்மை, பரவியுள்ள விதம், நோயாளியின் பொது ஆரோக்கியம் எனப் பல விஷயங்களை மனதில் கொண்டு, சிகிச்சையைத் தீர்மானிப்பார் கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்.
சர்ஜரி, கீமோதெரபி, ரேடியோதெரபி இந்த மூன்றும்தான் கேன்சருக்கு உண்டான முக்கிய சிகிச்சைகள். லங் கேன்சரை மிக மிக ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால் 5 ஆண்டுகள் உயிர் தாங்கும். இல்லையென்றால் நோய் தெரிந்த இரண்டாம் ஆண்டில் மரணம் நிச்சயம். உங்களை பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. புகை எனும் எமன் எந்த வேகத்தில் புற்றுநோயாளியின் உயிரைப் பறிக்கிறான் என்று தெரிந்துகொள்வதற்காகச் சொன்னேன்.அடுத்ததாக ‘சிஓபிடி’. நம் நாட்டில் இது ஏற்பட சிகரெட் புகைதான் முக்கியக் காரணம். முன்பெல்லாம் இது 50 வயதைத் தாண்டியவர்களுக்கே வந்தது. இப்போது 30 வயதிலும் வருகிறது. காரணம் என்ன? இப்போது 13 வயதிலேயே புகை பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். மிக அரிதாக சிறு வயதினருக்கும் புகை பிடிக்காதவர்களுக்கும் இது வரலாம். எப்படி? மரபுப் பிழை காரணமாக, ‘ஆல்பா -1 ஆன்டிடிரிப்சின்’ எனும் புரதம் கல்லீரலில் உற்பத்தியாவது குறைந்துபோய், இவர்களுக்கு இந்த நோய் வரலாம். மூச்சுக்குழாயில் சளி கட்டி அடைத்துக்கொள்வதும் காற்றுப் பைகள் நிரந்தரமாக சுருங்கி விடுவதும் இந்த நோய்க்குப் பாதை போடும் ‘கான்ட்ராக்’டர்கள்.வருடம் முழுவதும் இருமல், சளியில் ஆரம்பித்து கொஞ்ச தூரம்கூட நடக்க முடியாத அளவுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு இறுக்கம், விசில் சத்தம் போன்ற அறிகுறிகள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போவது ‘சிஓபிடி’ நோயை இனம் காட்டும். ஸ்பைரோமெட்ரி பரிசோதனை மூலம் நுரையீரலின் செயல் திறனை அறிந்து சிகிச்சை தரப்படும். மூச்சுக்குழாயை விரிக்கும் மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்த தற்காலிகமாக உதவும். மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தால், இன்ஹேலர் மற்றும் ஸ்டீராய்டுகள் கைகொடுக்கும்.
நோயாளியின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்து இதயம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளைப் பாதிப்பதாக இருந்தால், மூக்கு வழி ஆக்ஸிஜன் செலுத்தப்படுவதும் உண்டு. வெளிநாடுகளில் நுரையீரல் மாற்று சிகிச்சை இதற்கு பிரபலம். இதையெல்லாம் சராசரி இந்தியன் நினைத்துப் பார்க்கவே முடியாது. வீண் ஆசை எதற்கு?புகை அரக்கன் செய்யும் அடுத்த கொடூரம் ‘டிஏஓ’ (Thrombo-Angiitis Obliterans - TAO) எனும் கால் அழுகல் நோய்... இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் கால் வலிக்கிறது என்றுதான் சொல்வார்கள். பிறகு கொஞ்ச தூரம் நடந்தாலே கால்வலி தாங்காமல் உட்கார்ந்துவிடுவார்கள். அப்போதும் இதைக் கவனிக்காவிட்டால், கால் விரல்கள் கறுப்பு நிறத்துக்கு மாறும். ரத்தக்குழாய் அடைத்துக் கொண்டதால் விரல் அழுகத்தொடங்கிவிட்டது என்று அர்த்தம். இது இன்னமும் முற்றினால், காலையே துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
“இத்தனை வருடம் புகைத்துவிட்டேன். இனி நிறுத்தி என்ன பிரயோஜனம்?’’ - இப்படித்தான் புகைபிடிக்கிறவர்கள் அநேகரும் சலிப்போடு பேசுகிறார்கள். நடுவயதில் சிகரெட்டை நிறுத்தினாலும் ஆயுள் நீடிக்கும். முப்பது வயதுக்குள் சிகரெட்டை நிறுத்தியவர்களின் ஆயுள், சிகரெட்டையே தொடாதவர்களின் ஆயுளுக்கு சமம். ‘சரி, நான் புகைப்பதை நிறுத்தத்தான் நினைக்கிறேன். அதற்கு என்ன செய்வது?’ இந்தக் கேள்வி கேட்பவர்களுக்கு என்னுடைய பதில்... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.நீங்கள் ஒரே நாளில் புகைப்பதை நிறுத்த வேண்டியதில்லை. படிப்படியாகக் குறைக்கலாம். முதலில் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். பிறகு, புகைக்கும் நேர இடைவெளியைக் கூட்டலாம். புகைப்பதற்கு நினைப்பு வரும்போது கவனத்தை வேறு திசைக்குத் திருப்பலாம். குடும்பத்தாருடன் நேரில்/போனில் பேசலாம். வாட்ஸ்அப், ஃபேஸ் புக், ட்விட்டர் போன்றவற்றை நோண்டலாம். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து கடைசியில் மொத்தமாக நிறுத்திவிடலாம்.
இதெல்லாம் சரிப்படாது என்கிறவர்கள் புப்ரோபயான் (Bupropion) அல்லது வெரெனிக்ளின் டார்ட்ரேட் (Varenicline tartrate) மாத்திரையைச் சாப்பிடலாம். புகைப்பதை மறக்கச் செய்யும் மாத்திரைகள் இவை. டாக்டரின் ஆலோசனைப்படி சரியான டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். இதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும். இந்த இரண்டு வழிகளுக்கும் தயங்குபவர்களுக்கு காக்கும் கரங்களாக வந்திருக்கிறது நிகோடின் பட்டைகள். பிளாஸ்திரி போன்ற இந்தப் பட்டைகளை முன்கையில் தொடையில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
இதிலுள்ள மிகக் குறைந்த அளவிலான நிகோடின் தோல் வழியாக ரத்தத்துக்குச் சென்று, நீங்கள் சிகரெட் புகைப்பதால் அடையும் அதே அளவு உற்சாகத்தைக் கொடுக்கும். இதனால் முதலில் சிகரெட்டைத் தொட வேண்டாம் என்ற நிலைமைக்கு வருவீர்கள். பிறகு, படிப்படியாக இந்தப் பட்டைகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், அதிலுள்ள நிகோடின் அளவைக் குறைத்தும் வந்தால், ஆறு வாரங்களில் உங்களுக்கு நிகோடின் தேவை என்ற பரபரப்பு இல்லாமல் போகும்.புகைப் பழக்கத்தை நிறுத்த, இவை எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த மருந்து ஒன்று இருக்கிறது. இதை நீங்கள் கடைகளில் வாங்க முடியாது; உங்கள் கைவசமே உள்ளது. அதன் பெயர் ‘மனக் கட்டுப்பாடு’!
‘சிஓபிடி’யைத் தவிர்க்க என்ன வழி?
* புகை பிடிக்கக்கூடாது.
* மாசடைந்த காற்று பரம எதிரி. இதை சுவாசிக்க வேண்டாம்.
* ‘சிஓபிடி’ உள்ளவர்களுக்கு அடிக்கடி நிமோனியா சளி மற்றும் காய்ச்சல் வந்து மூச்சுத் திணறலை அதிகப்படுத்தும் என்பதால், நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
* முறையாக உடற்பயிற்சி அல்லது, பிராணாயாமம் செய்ய வேண்டும்.
* விறகு அடுப்பை தவிர்க்க வேண்டும்.
* ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
* மாசில்லா இடங்களில் வேலை செய்வதும் குடியிருப்பதும் ‘சிஓபிடி’ பிரச்னையைக் குறைக்கும்.
* வெளியில் செல்லும்போது முகத்தில் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும்.
டாக்டர் கு.கணேசன்
பேஸ்புக்கில்
எமது செய்திகளை
உடனுக்குடன் படிக்க எமது FACEBOOK PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.