
ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து இன்று (25) முற்பகல் நாடு திரும்பினார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வில் பங்குபற்றிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், நாடு என்ற வகையில் பின்பற்றப்படும் கொள்கைகளை ஜனாதிபதி அவர்கள் இதன்போது அரச தலைவர்களின் சந்திப்பில் தெரிவித்தார்.
ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கடந்த 17 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். 18 ஆம் திகதி காலை நியுயோர்க் நகரை சென்றடைந்த ஜனாதிபதி ,ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் மறுசீரமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூகப் பேரவையின் அமர்விலும் கலந்து கொண்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பல அரச தலைவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபை அமர்வு 19 ஆம் திகதி முற்பகல் ஆரம்பமானது. அன்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமர்வில் உரையாற்றியதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அன்றைய தினம் பிற்பகல் அமர்வில் தமது விசேட உரையை நிகழ்த்தினார்.
இலங்கையின் அரச தலைவர் என்றவகையில் கடந்த இரண்டரை வருட காலமாக நாட்டில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் உலக தலைவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும், அமைதியான சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி தமது உரையில் உலகத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமையைப் பெற்றதன் பின்னரான கடந்த 62 வருட காலத்தினை கருத்திற் கொள்ளும்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கும், சட்டதிட்டங்களுக்கும் அமையவே இலங்கை செயற்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்தும் அவ்வாறே செயற்படும் என்பதுடன், நாடு என்றவகையில் நாட்டின் சுயாதீனத் தன்மையையும் இறைமையையும் பாதுகாக்கும் வகையிலேயே செயற்படுவதாகவும் வலியுறுத்தினார்.
சுதந்திரமான, அமைதியான நாடாக மெதுவாக ஆனால் வெற்றிகரமாக முன்னோக்கி செல்லும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி , சில கடும்போக்காளர்கள் எதிர்பார்க்கும் முறையில் வேகமாக தாம் நாட்டின் பொறுப்புக்களை நிறைவேற்றவில்லை என்றும் வலியுறுத்தினார்.
பொதுச்சபை அமர்வு ஆரம்பமான தினம் நண்பகல் அமர்வில் பங்குபற்றிய அரச தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரஸ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்டார்.
அன்றைய தினம் இரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அரச தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் அவரின் பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் கலந்து கொண்டனர்.
தமது அமெரிக்க விஜயத்தினை ஐ.நா. பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக மாத்திரமாக வரையறுக்காது, இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக சில அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷஹீட் கான் அப்பாஸி, நேபாள பிரதமர் ஷர் ப{ஹதுர் சியாபா மற்றும் அமெரிக்காவின் அரசியல் துறை தொடர்பான உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனன் ஆகியோருடனும் ஜனாதிபதி அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மேலும் ஜனாதிபதி அவர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் {ஹசெய்ன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் இந்த விஜயத்தின்போது இடம்பெற்றதுடன் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கை பெற்றுள்ள முன்னேற்றத்தை அவதானிப்பதற்காக எதிர்வரும் வருடத்தில் இலங்கைக்கு வருகைத்தருமாறும் ஜனாதிபதி அவர்கள் ஆணையாளரிடம் அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரஸ் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 23 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றது.
சௌபாக்கியம் மற்றும் சகவாழ்வு நிறைந்த உலகில் முன்னுதாரணமான தேசமாக இலங்கை முன்னேறுவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் தாம் பெற்றுத்தருவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அவர்களுக்கும் ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பும் அன்றைய தினம் இடம்பெற்றதுடன், தாய்நாட்டின் சௌபாக்கியத்திற்காகவும் சகவாழ்வினை ஏற்படுத்துவதற்காகவும் இதுவரை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புக்களுக்கு இன்று சாதகமான பெறுபேறுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
நியுயோர்க் நகரிலுள்ள குவின்ஸ் பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், குவின்ஸ் பௌத்த விகாரையின் விகாராதிபதி குருனேகொட பியதிஸ்ஸ நாயக்க தேரர் ஆற்றிவரும் புத்தசாசனத்திற்கான சேவைகளுக்காகவும், சமூக சேவைகளுக்காகவும் பாராட்டு தெரிவித்ததுடன் இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தையும் வழங்கி வைத்தார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.