கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை அரேபிய கடல் பகுதியில் பாகிஸ்தான் வெற்றிக்கரமாக நடத்தி உள்ளது.
கராச்சி,
பாகிஸ்தான் ராணுவம், போர் பயன்பாட்டுக்காக அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் நிலத்தில் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
இந்த நிலையில் வடக்கு அரேபிய கடல் பகுதியில் வான்வழியில் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது. கடல் அரசன் என்னும் அதிநவீன ஹெலிகாப்டர் மூலம் செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதை பாகிஸ்தான் கடற்படை தளபதி முகமது ஷகாவுல்லா நேரடியாக பார்வையிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எங்களது கடற்படையை போருக்கு தயார் நிலையில் வைத்திருக்கவும், தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் திறனுடன் இருப்பதை உறுதி செய்யவும் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. நாட்டின் கடல் எல்லையை பாதுகாக்க பாகிஸ்தான் கடற்படை எதையும் சந்திக்க தயாராக உள்ளது’’ என்றார்.
கடந்த மே மாதம் பாகிஸ்தான் வெஸ்ட்லண்ட் ஷி கிங் என்ற அதிநவீன 7 ஹெலிகாப்டர்களை இங்கிலாந்திடம் இருந்து வாங்கியது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.