ரூ.150 கட்டணம்
மாதத்தில் 4 தடவைக்கு மேல் பணம் செலுத்தினாலோ, எடுத்தாலோ, ஒவ்வொரு ரொக்க பரிமாற்றத்துக்கும் குறைந்தபட்சம் ரூ.150 கட்டணம் வசூலிக்க எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகள் முடிவு செய்துள்ளன. இந்த கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகளுக்கு இது பொருந்தும்.
மேலும், அடுத்தவர் கணக்கில் பணம் செலுத்துவதற்கான உச்சவரம்பை நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் என்று எச்.டி.எப்.சி. வங்கி நிர்ணயித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்த உச்சவரம்பை ரூ.50 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. ரொக்கம் கையாள்வதற்கான கட்டணத்தை எச்.டி.எப்.சி. வாபஸ் பெற்றுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை பொறுத்தவரை, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு இருந்த கட்டணங்கள் நீடிக்கும். ஒருசில கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ஒருவர், தான் கணக்கு வைத்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளையில் மாதத்தில் 4 தடவை பண பரிமாற்றம் செய்து கொள்வதற்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் ஆயிரம் ரூபாய்க்கு 5 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், குறைவான தொகைக்கு பரிமாற்றம் செய்தாலும், ரூ.150 கட்டணம் செலுத்தியாக வேண்டும்.
எந்திரம்
கணக்கு வைத்திருக்காத பிற ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளையில், மாதத்தின் முதலாவது பண பரிமாற்றத்துக்கு மட்டுமே கட்டணம் கிடையாது. அதற்கு பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும் குறைந்தபட்சம் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பணம் செலுத்தும் எந்திரத்தில் பணம் செலுத்தும்போது, மாதத்தில் முதல் தடவை பணம் செலுத்துவதற்கு மட்டுமே கட்டணம் கிடையாது. அதன்பிறகு பணம் செலுத்துவதற்கு, ஆயிரம் ரூபாய்க்கு 5 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். அதுபோல், பிற வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கியை பொறுத்தவரை, மாதத்தில் 5 பண பரிமாற்றங்கள் அல்லது ரூ.10 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு பிந்தைய பரிமாற்றங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும்.
மத்திய பொதுத்துறை வங்கிகளிலும் இதுபோல் கட்டணமுறை அமலுக்கு வந்துள்ளதா என்று தெரியவில்லை. இதுபற்றி ஒரு பொதுத்துறை வங்கியின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று தெரிவித்தார்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.