அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றத் தடை உத்தரவை ஏற்க மறுத்த சட்டமா அதிபர் சேலி யேட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள் ளார்.
ட்ரம்பினால் விதிக்கப்பட்ட குடியேற்றத் தடை உத்தரவின் சட்டபூர்வத் தன்மை குறித்த வழக்குகளில், அரசுக்கு ஆதரவாக வாதாட வேண்டாம் என அமெரிக்க நீதித்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்ட சில மணி நேரங்களுக்குள், இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
யேட்ஸ் நீதித்துறைக்கு 'துரோகம்' இழைத்து விட்டார் என அமெரிக்க ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இவருக்கு பதிலாக விர்ஜீனியாவின் கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க அரச சட்டத்தரணியாகப் பணியாற்றிவரும் டானா பொயண்ட்டே தற்காலிக சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்ரம்ப் பிறப்பித்த சர்ச்சைக்குரிய இந்த நிர்வாக ஆணை, 7 முஸ்லிம் நாடுகளின் பிரஜைகள், அமெரிக்காவுக்கு வருவதைத் தற்காலிகமாகத் தடை செய்திருக்கிறது.
இந்த உத்தரவு சட்டபூர்வமானது தானா என்பது குறித்து தான் திருப்தியடையவில்லை என ஒரு கடிதத்தில் யேட்ஸ் கூறியிருக்கிறார். ''நான் சட்டமா அதிபராக இருக்கும் வரை, இந்த நிர்வாக ஆணையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி எனது துறை வாதங்களை முன்வைக்காது'', என அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், சேலி யேட்ஸ் '' அமெரிக்க மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டபூர்வ உத்தரவை அமுல்படுத்த மறுத்ததன் மூலம் நீதித்துறைக்கு துரோகம் செய்துவிட்டார்'', என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
''ஜனாதிபதி ட்ரம்ப் யேட்ஸை பதவியிலிருந்து அகற்றிவிட்டார்'', என அவரது ஊடகச் செயலரிடமிருந்து வந்த அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது தற்காலிக சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள போயண்டேயும் ஒபாமாவின் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர். அவரது நியமனம் 2015 இல் அமெரிக்க செனட்டால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இந்த புதிய பதவிக்கு அவர் தகுதியுள்ளவராகிறார்.
ஆனாலும் இவரது நியமனம் இன்னும் செனட்டால் உறுதிப்படுத்தப்படவில்லை.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.