கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த மாணவர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
கோட்டயத்திலுள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட எஸ்எம்இ மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்பு பயின்று வந்த மாணவர் ஆதர்ஷ் (25). கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே கல்லூரியில் படித்து வருபவர் லட்சுமி (21). இவர் ஆலப்புழாவைச் சேர்ந்தவர்.
இருவருக்கும் இவர்கள் இருவரும் சில காலம் பழகி வந்ததாகவும் இந்நிலையில் லட்சுமி சில நாட்களாக சரிவர பேசாது விலகியதால் ஆதர்ஷ் இவ்வாறு செய்திருக்கலாம் என இருவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரம் கூறுகிறது.
இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ரெஜி ராம் கூறும்போது, "தேர்வு எழுதுவதற்காக ஆதர்ஷ் வந்திருந்தார். ஆனால், அவர் நேரடியாக அவரது வகுப்புக்குச் செல்லாமல் லட்சுமியின் வகுப்பறைக்குச் சென்றிருக்கிறார். லட்சுமியிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்திருக்கிறார்.
ஆனால், லட்சுமி ஏற்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஆதர்ஷ் தான் மறைத்து வைத்திருந்த புட்டியிலிருந்து பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு பற்ற வைக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார். பயத்தில் அங்கிருந்து லட்சுமி தப்பியோடினர். அருகிலிருந்த கல்லூரி நூலகத்துக்குள் அவர் புகுந்தார்.
அவரை துரத்திச் சென்ற ஆதர்ஷ், பெட்ரோலை லட்சுமி மீதும் ஊற்றினார். பின்னர் தனது பையிலிருந்த லைட்டரை எடுத்து பற்ற வைத்தார். இருவரையும் காப்பாற்றச் சென்ற மாணவர்களையும் மிரட்டி துரத்தினார். சிறிது நேரத்தில் இருவரும் கீழே சரிந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம்" என்றார்.
ஆதர்ஷுக்கு 80% தீக்காயமும், லட்சுமிக்கு 65% தீக்காயமும் ஏற்பட்டது. இருவரும் பலியாகினர். இருவரிடமும் நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.