நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் கோயல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை ரூ.251க்கு வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
காசியாபாத்-ஐ சேர்ந்த அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ரிங்கிங் பெல்ஸ் தலைவர் மோஹித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் ஃப்ரீடம் 251 போன்களை விநியோகம் செய்ய கோயல் மற்றும் ரிங்கிங் பெல்ஸ் சார்பில் சிலரால் 2015 நவம்பரில் வற்புறுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரனை மேற்கொள்ள கோயல் கைது செய்யப்பட்டுள்ளதாக காசியாபாத் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மனிஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
'நாங்கள் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு பலகட்டங்களாக ரூ.30 லட்சம் வரை வழங்கியுள்ளோம். ஆனால் அந்நிறுவனம் சார்பில் ரூ.13 லட்சம் மதிப்புடைய பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது', என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 16 லட்சம் ரூபாயை கேட்கும் போது கொலை செய்வதாக பலமுறை தொடர்ந்து மிரட்டியதாக அயாம் என்டெர்பிரைசஸ் நிறுவன தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை ரூ.251க்கு வழங்குவதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் இதுவரை 30,000 வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன்களை விநியோகம் செய்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.